Active Members

S. Subburaj IES

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ், இந்திய பொருளாதாரப் பணி அதிகாரியாக மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழிலாளர் நலத்துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நடைபெற்ற, 400 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள், நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சியில் பெருமளவு பங்காற்றினார். மேலும், மக்கள் பணிகளில் நியூஸ் 7 தொலைக்காட்சி எப்போது ஈடுபட்டாலும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார். சென்னையில் பணியாற்றிவரும் இவர் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது வரவேற்கத்தக்கது.

V. Murugesan

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் முருகேசன், தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை மாணவர்கள் கல்வி கற்க பல உதவிகளைச் செய்துவருகிறார். நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்தில் இணைந்து, ஜுன் மாதம் 9-ம் தேதி சின்னாளபட்டியில் நடந்த நிகழ்ச்சியில் உதவிகளைப் பெற்றுத்தந்ததில் பெரிய அளவில் பங்காற்றினார். அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட இரவு பகல் பாராது அயராது உழைத்த இவரது ஆர்வம் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை நெகிழச்செய்தது. 

C. Mahendran M.P.

உடுமலைப் பேட்டையில் மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அவதிப்பட்டுவந்தார். 1998 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு, கல்விச் சான்றிதழ்களைப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவியின் கல்விக் கட்டணங்களைச் செலுத்துவதோடு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த மாணவி இலவசமாகக் கல்வி கற்க ஏற்பாடு செய்து தந்த சி. மகேந்திரனின் பணி மகத்தானது. நன்றாகப் படிக்கும் ஒரு ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய இவர் தற்போது பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். 

Nizamdeen

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிஜாமுதீன், சவுதி அரேபியாவில் பணியாற்றிவருகிறார். கடந்த மே(2018) மாதம் நீட் தேர்வு நடைபெற்றபோது, கேரளாவில் தமிழக மாணவர்கள் தங்குவது மற்றும் உணவுச் செலவுகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். அவர் அளித்த ரூ. 1,00,000 நிதி, மாணவர்கள் கேரளாவில் தங்கிய விடுதியின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியைத் தொடர்புகொண்ட அவர், தமிழக மாணவர்கள் பரிதவிப்பது தமது மனதைப் புண்படுத்துவதாகவும், மாணவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதன் மூலமே அதை ஆற்றமுடியும் என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு அவர் உதவ முன்வந்ததை அன்புடன் ஏற்றுக்கொண்ட நியூஸ் 7 தமிழ், மாணவர்கள் பயன்படுத்திய விடுதியின் வங்கிக் கணக்கைப் பெற்று அனுப்பிவைத்தது. மனமுவந்து அவர் அளித்த ரூ. 1,00,000/- நமது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பேருதவியாக அமைந்தது என்றால், அது மிகையில்லை.